குமார கம்பணன்
குமார கம்பணன் விஜய நகரப் பேரரசைச் சேர்ந்த மன்னனாவான். கிபி. 1336 ஆம் ஆண்டில் ஹரிஹரர் மற்றும் புக்கர் எனும் சகோதரர்கள் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தார்கள். குமார கம்பணன் புக்கரின் மகன் ஆவார். இவர் கிபி 1362 இல் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட இராஜநாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினார். பின்னர் மதுரைக்குப் படையெடுத்து அங்கு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். கி.பி. 1364 ஆம் ஆண்டளவில் மகமதியர்களின் ஆட்சி நிலை குலையத்தொடங்கி கி.பி. 1378 வரை போராட்டம் நடைபெற்றது. குமார கம்பண்ணன் பாண்டியர்களிற்கு உதவி செய்தும் கோயில் அறநிலையங்களினைப் பாதுகாப்பதனையும் கடமையாகக் கொண்டு போர் புரிந்து பல தலைவர்களினைப் பாண்டிய நாட்டினைக் காக்கும் பொறுப்புகளில் அமர்த்தினான்.
மதுரை படையெடுப்பின் போது உடனிருந்த இவரது மனைவி கங்காதேவி மதுரை முற்றுகையையும், வெற்றிகளையும் ‘மதுரை விசயம்’ என்ற தனது சமஸ்கிருத நூலில் பதிவு செய்துள்ளார்.