ஜக்கம்மா வரலாறு
கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாமியரின் படை எடுப்பால் இருக்குமிடங்களிலிருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதற்கு இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இசுலாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி தமிழகத்துக்கு வந்தனர். இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார். என்று இச்சாதியினர் தெரிவிக்கின்றனர். மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.