எத்தலப்ப நாயக்கர்
.பி. 1799ல் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு கி.பி. 1801 பிப்ரவரி 2ல் மீண்டு நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான பாஞ்சைப் போரிலே ஊமைத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்கள் தலைமையில் தளி பாளையமும் போர்க்களத்தில் இறங்கியது. அப்போரின் போது, 14 ஜமீன்களையும் ஒன்றிணைத்து அதற்கு தலைமையேற்று, தளிப்பகுதியின் பாளையக்காரராக இருந்தவர் எத்தலப்ப நாயக்கர், இவர் தனது படையுடன் வந்து உதவினார். அப்போது, எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரை சந்திக்க அனுப்பிவைத்தது.
நீதிவிசாரணை என்ற பெயரில் கட்டபொம்மனை வஞ்சனையாகத் தூக்கிலிட்ட ஆங்கிலேயரின் செயல், நண்பனாகிய எத்தலப்பனைப் பாதித்திருக்கவே, எத்தலப்ப நாயக்கர் தனது படை வீரர்களை அனுப்பி ஆங்கிலத் தூதுக்குழுத் தலைவனை மட்டும் தனியே கைது செய்து அவனைத் தூக்கிலிட்டார்.
அவர் தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தை இப்போதும் மக்கள் தூக்குப்புளிய மரம் இருந்த இடம் தூக்குப் புளிய மரம் தோட்டம் என்று அழைத்து வருகிறார்கள். இவரது சமாதியில், தூக்கு மேடை சிலுவைக்கல்லை அடுத்து, கல்வெட்டுப் பகுதி படுக்கை வசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் படிக்க முயற்சித்த போது அது ‘அந்திரை கெதி’ அல்லது ‘எங்கிரை கெதி’ என்னும் ஆங்கிலேயரின் அடக்கம் செய்யப்பட்ட சமாதி எனக் கண்டறியப்பட்டது. மேலும், அங்குள்ள கல்வெட்டின் மூலம் கி.பி. 1801ம் வருடம் ஏப்ரல் மாதம் 23ம் நாள் 27-வது வயதில் வியாழக்கிழமை அன்று அவர் இறந்த செய்தியை இச்சமாதிக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. மேலும் இக்கல்வெட்டு வரலாற்று ஆவணமாக இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு குறிப்பாக தென்னிந்தியப் பாளையக்காரர்கள் கிளர்ச்சியோடு கொங்குப் பாளையக்காரர்களது கிளர்ச்சியையும் உரமூட்டுவதாக அமைகின்றன.
கொங்குப் பாளையக்காரர்களது சுதந்திர எழுச்சியைக் காட்டும் முதல் கல்வெட்டு ஆதாரமாக இக்கல்வெட்டை எடுத்துக்கொள்ளலாம். இதன்படி, ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட முதல் சுதேசி ஆங்கிலேய எதிர்ப்புப் பாளையக்காரர் என்ற வரிசையில் கொங்குநாட்டுப் பாளையக்காரராகிய ‘தளி’ பாளைய எத்தலப்பன் வரலாற்றை உணர வைக்கிறது. இக்கல்வெட்டு இந்தியாவின் ஆங்கிலேய எதிர்ப்புப் போரை செழுமைப்படுத்தும் முக்கிய ஆவணமாக அமைகிறது. இக்கல்வெட்டை கையகப்படுத்தி அதனை காக்க வேண்டியது அரசின் கடமையாகும்.