தெய்வமான ஊமைத்துரை
ஆங்கிலேயர்களின் பீரங்கிகளால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டபோது, அங்கிருந்து தப்பியோடிய கட்டபொம்மனும், அவரது தம்பி ஊமைத்துரையும் தங்கிய இடம்தான் பொன்னமராவதி அருகேயுள்ள குமாரபட்டி கிராமம். இங்கேதான் ஊமைத்துரை, ஊமை கருப்பராக வழிபடப்படுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகேயுள்ள குமாரபட்டி கிராமத்தின் அருகேயுள்ள காட்டுக்குள் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் பதுங்கியிருந்தனர்.
அவர்களுக்கு அந்தக் கிராமத்தினர் உதவிகளும் செய்துவந்தனர். எனினும், கட்டபொம்மன், ஊமைத்துரை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்குத் தண்டனையும் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து 216 ஆண்டுகள் கடந்தோடிவிட்டன. ஆனால், அச்சம்பவம் இன்றளவும் குமாரப்பட்டி மக்களின் மனதில் ஆராத வடுவாக உள்ளது.
கட்டபொம்மன் தரப்பினர் தங்கியிருந்த காட்டைக் குமாரப்பட்டி மக்கள், புனிதமான வனமாக மாற்ற முடிவெடுத்தனர். ஊமைத்துரைக்குக் கோயில் அமைத்து ஊமையன் கருப்பர் என்ற பெயரில் இன்னும் வழிபட்டுவருகின்றனர். வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ஊமையன் கருப்பர் (ஊமைத்துரை) கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில் நடைபெறும் பிரமாண்டமான திருவிழாவில் பங்கேற்கப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி மே மாதம் மூன்றாம் தேதி பவுர்ணமித் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்றது.
அன்று இரவு வழக்கம்போலவே கட்டபொம்மன் நாடகம் மற்றும் ஊமையன் கருப்பருக்குப் பொங்கல் வழிபாடுகளும் செய்யப்பட்டன.
ஆங்கிலேயரை எதிர்த்து வீர முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது தம்பி ஊமைத்துரை உள்ளிட்டோரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் வண்ணமாக ஊமையன் கருப்பர் ஆலயம் திகழ்கிறது.